தமிழ்நாடு மாநில பேரிடர் அபாய தணிப்பு முகமை

தமிழ்நாடு அரசு தனது அரசாணை எண்.488, வருவாய் ஸபேரிடர் மேலாண்மை-ஐ (2)] துறை, நாள்:28.11.2013 மூலம் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை அமைக்கவும் அதனை தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் செய்யவும் ஆணைப்பிறப்பித்தது. அதனடிப்படையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை உருவாக்கப்பட்டு தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம் 1975-ன் கீழ் 09.01.2014 அன்று பதிவு எண்.2/2014-ன் படி பதிவு செய்யப்பட்டது.

இம்முகமையானது, தமிழ்நாடு அரசு அரசாணை எண். 234 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஸபேரிடர் மேலாண்மை-ஐ (2)] துறை நாள்: 26.06.2018-ல் தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இம்முகமை பல்வகை பேரிடர் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாக்க முகமையாக செயல்படுகின்றது.

இம்முகமையின் முக்கிய செயல்பாடுகள்

  • பேரிடர் நிகழ்வின் போதும், பின்னரும் மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணம் வழங்குதல் போன்றவற்றில் மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல்.
  • பேரிடர் மேலாண்மை தொடர்பான புள்ளி விவரங்கள், பயிற்சி அளிக்கப்பட்ட மீட்புப்படை அமைப்பினர், வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகள் போன்றவற்றின் தகவல் களஞ்சியமாக செயல்பட்டு வருகிறது.
  • பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு குறித்த திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளுதல்
  • அரசுக்கு தொழில்நுட்ப உதவிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகளை அளித்தல்.
  • இயற்கை பேரிடர் நிகழ்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளுக்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை தணிக்க உரிய வழிமுறைகளை தெரிவித்தல் .
  • எவ்வகையான பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான அணுகுமுறைகள், கோட்பாடுகள், திட்ட வழிமுறைகள் மேலாண்மை குறித்த செயல்திட்டம் வகுத்தல்.
  • பேரிடர் மேலாண்மை தொடர்பான பிற நிதி நிறுவன உதவிகளுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செயல்படுத்த திட்டங்கள் வகுத்தல்.
  • மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு ஆகிய நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியையோ நிதி உதவியையோ அல்லது கடனாகவோ தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகளின் முகமைகள், செஞ்சிலுவை சங்கம், நன்கொடையாளர்கள், மற்றும் இதர தனியார் நிறுவனங்களிலிருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
  • இம்முகமை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற உரிய நிதியுதவியை பெற ஏற்பாடுகள் செய்தல். நில உடைமைகள், கட்டிட உடைமைகள், தளவாடங்கள், கட்டிட சேதாரங்கள் போன்றவற்றை விற்பதனால் ஏற்படும் நிதியை மேலாண்மை செய்யவும், நிர்வகிக்கவும், மறுமூலதனம் செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.

இம்முகமை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களை தலைவராக கொண்ட ஆட்சிக் குழுவால் வழி நடத்தப்படுகின்றது. வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் இம்முகமையின் செயற் குழுவின் தலைவராகவும், பேரிடர் மேலாண்மை ஆணையர் உறுப்பினர் செயலராகவும் செயல்பட்டு வருகின்றனர். வருவாய் நிருவாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையரின் முழுக் கண்காணிப்பில் இயங்கும் இம்முகமையானது மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாக்க முகமையாக செயல்படுகின்றது.