நிலச்சரிவுகள்

அறிமுகம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கிழக்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகள், ஏலகிரி மற்றும் சேர்வராயன் மலைப்பகுதிகள் போன்றவற்றில் அதிகப்படியான நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் போன்றவை வேகமாக நிகழக்கூடிய நிலச்சரிவுகளாகும். மேலும், நிலச்சரிவுகள் பொதுவாக கனமழைக்காலங்களில் ஏற்படுகிறது. இவற்றால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இந்திய புவியியல் அளவை அமைப்பு (ழுநடிடடிபiஉயட ளுரசஎநல டிக ஐனேயை) பின்வரும் அறிவிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.

வகை-1.

மக்கள் வசிக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஏற்படும் நிலச்சரிவுகளால் அதிகப்படியான உயிரிழப்புகளும், குடியிருப்புகளில் சேதங்களும் பெரிய அளவில் ஏற்படுகின்றன.

வகை-2.

மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஒட்டியுள்ள இடங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளால் குறைந்த அளவிலான உயிரிழப்புகளும் உடைமைகள் சேதங்களும் ஏற்படுகின்றன.

வகை-3.

பெரிய அளவில் ஏற்படும் நிலச்சரிவுகளால் நெடுஞ்சாலைகள், நகர்ப்புற சாலைகள், இருப்புப் பாதைகள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள் ஆகிய கட்டமைப்புகளில் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படுகின்றன. மேலும், நிலச்சரிவுகளால் நீர்மின் திட்டங்களும் பாசனத் திட்டங்களும் பாதிப்படைகின்றன.

வகை-4.

மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அப்பால் மிகக் குறைந்த அளவிலான நிலச்சரிவுகளால் உயிரிழப்புகளோ, பொருள் சேதங்களோ ஏற்படுவதில்லை.

நிலச்சரிவின் அறிகுறிகள்

பாறைகளில் ஏற்படும் விரிசல்கள், சிறிய அளவிலான சரிவுகள், நீர்வழித் தடங்களிலுள்ள செங்குத்தான பாதைகள் போன்றவற்றில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. நீர்வழித்தடங்களில் ஏற்படும் விரிசல்களால் நிலச்சரிவுகள் ஏற்படுவதால் தாவரங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. விரிசல்களின் வழியாக நீர் அதிக அளவில் செல்லும் போது பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விரிசல்கள் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னதாக தோன்றுவது நிலச்சரிவுகள் உருவாவதற்கான அறிகுறிகளாகும். மரங்கள் சாய்தல், மின் கம்பங்கள் சாய்தல் மற்றும் நிலங்களில் விரிசல்கள் விழுதல் மற்றும் கட்டிடங்களில் விரிசல் விழுதல் போன்றவை நிலச்சரிவுகளுக்கான அறிகுறிகளாகும்.

விழிப்புணர்வு நடவடிக்கைக்கள்

  • மேற்காணும் அறிவுரைகளை கருத்தில் கொண்டு பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம். சமுதாய அளவிலான குழுக்கள் அமைத்து அவற்றிற்கு பயிற்சிகள் அளித்து அவர்கள் மூலம் மேற்காணும் அறிகுறிகளை குறித்த செய்திகளை உடனுக்குடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன் மூலம் அங்குள்ள பகுதிகளில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • நிலச்சரிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் கல்வி நிலையங்களின் துணை கொண்டு நடத்த வேண்டும். அதன் மூலம் அருகாமையில் ஏற்படும் நிலச்சரிவுகள் குறித்து மக்கள் அறிவதற்கு உதவி புரியும்.

பேரிடருக்கு முன்பு

நிலச்சரிவானது அதிக மழைப் பொழிவுள்ள மலைப்பிரதேசங்களில் நடைபெறுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தொடர்புடைய துறைகளான வனத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து குழுக்கள் அமைத்து ஆயத்த பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மேலும் நிலச்சரிவுகள் ஏற்படாமல் தடுக்க மேற்கண்ட குழுக்களை நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு முன்னதாக அனுப்பி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும்.

முதற்கட்டம் - அறிவிப்பு நிலை

மிக அதிக மழை வரும் காலங்களில் மற்றும் திடீரென மழை பொழியும் போதும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

  • மாவட்ட நிர்வாகம் மழைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட சாத்தியமுள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.
  • தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அவர்களுடைய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் மீட்பு பணிக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • மருத்துவ ஆயத்த நடவடிக்கைகள் பேரிடர் மேலாண்மையின் முக்கிய அங்கமாகும். எனவே மருத்துவக் குழுக்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்

இரண்டாம் கட்டம் - பேரிடரின் போதும், பேரிடருக்கு பிறகும்

நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு
  • மலைப்பாதையில் நிலச்சரிவுகள் ஏற்படும் போது போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. மரம் அறுக்கும் மின் இயந்திரங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக சென்று குப்பைகளை அகற்ற வேண்டும். தேவைப்படும் இடங்களில் போதிய மாற்றுப்பாதைகள் அமைத்து போக்குவரத்தினை சீர்செய்ய போக்குவரத்து காவல்துறை ஆவன செய்ய வேண்டும்.
  • இதுபோன்ற நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டு சாலைகளில் தவிக்கும் மக்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் நிலச்சரிவுகள்

  • எச்சரிக்கை ஒளிப்பான்கள் மூலம் உடனடியாக எச்சரிக்கை செய்யும் முறையினால் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, அவர்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
  • தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். பெரிய உபகரணங்களைக் கொண்டு இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட மக்களை கண்டறிந்து அவர்களை மீட்க வேண்டும்.
  • சமூக குழுக்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் உடனடியாக ஈடுகின்றன.
  • சுகாதாரத் துறை தேவைப்படும் இடங்களில் ஆம்புலன்ஸ்களை அனுப்பி அதிக காயம் அடைந்தவர்களை மீட்க வேண்டும்.
  • மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் பாதிக்கப்பட்ட இடம், தேவைப்படும் உதவிகள், பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை கொண்ட தகவல்களை தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு அளித்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப் படுத்த வேண்டும்.
  • இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திடம் இருந்து வரப்பற்ற செய்திகளின் அடிப்படையில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் நிலச்சரிவுகள் குறித்து மதிப்பீடு செய்து தேவைப்படும் பட்சத்தில் அண்டை மாவட்டங்களில் இருந்து தேடுதல் மற்றும் மீட்பு குழுக்களை வரவழைத்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
  • தேவை ஏற்படின் இராணுவத்தின் உதவியினை கோரலாம்.
  • காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அளிப்பதின் மூலம் பேரிடர்களின் போது ஏற்படும் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம். அதற்கென 24 ஓ 7 நேரமும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்க வேண்டும். நிலச்சரிவு நடந்த பின் காணாமல் போனவர்கள் விவரம் மற்றும் இறந்தவர்களின் விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து காணாமல் போனவர்கள் மற்றும் இறந்து போனவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும்.
  • நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும், அவர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் உடை ஆகியவை வழங்கிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  • மீதமுள்ள வீடுகளின் நிலைப்புத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்களின் நடவடிக்கைகளுக்கு காவல்துறை உதவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் பாதைகளை சரி செய்வதின் மூலம் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எளிதில் செல்ல இயலும். ஊர்க்காவல் படையினரை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும்.

பேரிடர் அல்லாத காலங்களில்

  • நிலச்சரிவுகள் ஏற்படும் மாவட்டங்களில், நிலச்சரிவு பாதிப்பு மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள், அபாய மண்டலங்கள் குறித்த வரைபடங்கள் உருவாக்குதல் மூலம் இது போன்ற நிகழ்வுகளை இனி வருங்காலங்களில் எதிர்கொள்வதற்கு வழிகாட்டியாக அமையும்.
  • பொறியாளர்கள் மற்றும் புவியியல் வல்லுநர்களுக்கு நிலச்சரிவு வரைபடங்கள், தொழில்நுட்பங்கள், பகுப்பாய்வுகள் குறித்த பயிற்சிகள் வழங்க வேண்டும்.
  • பாதுகாப்பு குறித்த நிலச்சரிவு குறித்து விழிப்புணர்வினை சமூகத்தில் ஏற்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது அத்தியாவசியமாகும்.
  • மலைப்பகுதியில் உள்ள நிலங்களில் மாற்று வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் நிலச்சரிவினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க இயலும்.