ஒத்திகைப் பயிற்சி

சுனாமி மாபெரும் ஒத்திகைப் பயிற்சி

சுனாமி எனும் ஆழிப்பேரலை, தொடர்பான மாதிரி பயிற்சியொன்றினை பல்வேறு மாநிலங்களில் இந்திய கடல்சார் தகவல் மையத்துடன் (INCOIS) இணைந்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 24.11.2017-ல் நடத்தியது. இம்மாதிரி பயிற்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களும் பங்கு கொண்டன. இதன் ஒரு பகுதியாக, ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் உள் அரங்கப் பயிற்சி ஆகியன காணொளிக் காட்சி மூலம் 22.11.2017 அன்று சென்னையில் உள்ள எழிலகம் வளாகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர், அரசு செயலர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) பிரதிநிதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பல்துறை மூத்த அலுவலர்கள், இராணுவம், கப்பல்படை, கடற்படை / காவல் மற்றும் கடலோர படை உறுப்பினர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் 9.00 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதி அதன் விளைவாக, சுனாமி எனும் ஆழிப் பேரலை நிகழ விருப்பது போன்று உருவகப்படுத்தப்பட்டு 24.11.2017 காலை 9.30 மணிக்கு இந்திய கடல் சார் தகவல் மையத்திலுள்ள ஆழிப்பேரலை எச்சரிக்கைச் செய்தி பெறப்பட்டு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்மாதிரி பயிற்சியானது, இந்திய கடல்சார் தகவல் மையத்தின் இந்திய சுனாமி முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட மாதிரி சுனாமி தகவல் அறிவிப்புகளைக் கொண்டு நான்கு மணி நேரத்திற்கு மேலாக உடனிகழ் நிகழ்வாக மேற்கொள்ளப்பட்டது.

பேரிடர் மேலாண்மை சார்ந்த அலுவலர்களுக்கு, செய்தி தொடர்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஆழிப் பேரலை எச்சரிக்கை முறைகள், அவசர கால மீட்பு நடவடிக்கைகள் மற்றும் அவசர கால ஆயத்த நடவடிக்கைகள் குறித்த ஒத்திகைகளை மேற்கொண்டதன் வாயிலாக உண்மை நிலையினை எதிர்கொள்ள இப்பயிற்சி உதவியாக இருந்தது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலர்களுக்கான பயிற்சி

மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் 10.07.2017 அன்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, அரசாணை நிலை எண். 282, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை (பே. மே 2), நாள்: 23.09.2017-ன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கிட தமிழ்நாடு அரசு ரூ.73.55 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்கண்ட தொகையில், மண்டல அளவிலான பேரிடர் ஆயத்தப் பயிற்சிகள் மேற்கொள்ள ரூ.13.55 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் ஒத்திகைப் பயிற்சிகள் மேற்கொள்ள கடலோர மாவட்டங்களுக்கு தலா ரூ.3.00 இலட்சம், பிற மாவட்டங்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் என மொத்தமாக ரூ.60.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.